சிவன் கதைகள்
சத்குரு: தென்னிந்திய பகுதியில், கர்நாடக மாநிலமாக தற்போது உள்ள இடத்தில், ஒரு பக்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அழகான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த பக்தருக்கு வயதுமுதிர்ந்த தாய் இருந்தார். அவரது தாய் தன் குழந்தைகளை வளர்த்து அவர்களை உயர்வடையச் செய்வதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தார். அவர் தனக்கென்று எதையும் கேட்டதில்லை. முதல்முறையாக தன் ஒரே மகனிடம் காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையைத் தெரிவித்தார்.
“இந்த ஒரு விஷயத்தை எனக்கு தயவுசெய்து நிறைவேற்றிக்கொடு!” என்று அவர் வேண்டினார். தனது தாய் மீது அளவில்லா அன்புகொண்ட அம்மகன் உடனடியாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொன்னார். தனது பொருள்வாழ்க்கை சார்ந்த செயல்பாடுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, அவர்களிடம் பிரியாவிடை பெற்று, தனது தாயைக் கூட்டிக்கொண்டு பயணத்தை துவக்கினார். இந்தியாவின் தென் பகுதியிலிருந்து காசிக்கு நடந்தே செல்ல இருவரும் முற்பட்டார்கள். அது ஒரு நீண்ட பயணம்.
பல வாரங்கள் கடந்த நிலையில் பயணக் களைப்பில், வயதுமுதிர்ந்த தாய் பலகீனமடைந்தார். அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ஆகவே, அந்த பக்தர் தனது தாயை தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினார். தனது முழுபலமும் தீரும்நிலையிலும் கூட நடந்துகொண்டிருந்த அவரிடம், தனது தாயின் ஆசையை என்ன விலைகொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு இருந்தது.